தமிழகத்தில் பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ததற்காக ஜவுளித்துறையிடமிருந்து பாராட்டையும், நன்றியையும் பெற்றுக்கொள்ளும் தமிழக முதல்வர் தமிழகத்தில் பஞ்சு விளைச்சலை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீவிர பருத்தி சாகுபடி திட்டத்தை துவக்க வேண்டும்.புதுரகங்களை புகுத்த வேண்டும். பருத்தியால் விவசாயிகளுக்கு இலாபம் அதிகம். காய்கறிகளைப்போல் கெட்டுப்போகாது.
தமிழகத்திலுள்ள பல்வேறு ஜவுளிசார்ந்த தொழிற்சாலைகளுக்கு 1 கோடியே 10 இலட்சம் பேல்கள் பஞ்சு தேவைப்படுகிறது. ஆனால் விளைச்சலோ 4 முதல் 5 இலட்சம் பேல்கள் மட்டுமே. இதனால் பஞ்சுத்தேவைக்காக ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஜவுளித்துறையினர் செல்ல வேண்டியுள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக இருந்த கொங்குமண்டலம் இன்று பருத்தி விளைச்சல் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.
எனவே தமிழகத்தின் சுயசார்பை ஊக்குவிக்க, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பஞ்சு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை, காய்ப்புழு போன்றவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் நிரந்தரத்தீர்வைக் கொடுத்து, பஞ்சு உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.