தமிழக ஆளுநர் ஆர்என் ரவி வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவிக்கையில், “மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கல்வீசி தாக்கி உள்ளார்கள். ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?
தமிழகத்தில் தினமும் கொலை, பாலியல் வன்முறைகள் நடந்த வண்ணம் உள்ளது. முற்றிலுமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தனது கண்ணை கட்டிக் கொண்டு, தனது கட்சி சித்தாந்தத்தை கொண்டு மத்திய அரசை எதிர்ப்பது மட்டும் குறிக்கோளாக கொண்டு உள்ளார்.
தமிழக ஆளுநர் மீது திமுக தொண்டர்கள் எதிர்பாராதவிதமாக ஒரு தாக்குதலை நடத்தவில்லை. தலைவர்களின் தூண்டுதல் பெயரிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலவரத்தை உருவாக்க பாஜக விரும்பவில்லை. அதேசமயத்தில் ஆளுநரின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று கடிதம் எழுத போகிறேன். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு, டிஜிபி, உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும்” என்று அண்ணாமலை தெரிந்தார்.