தமிழக கவர்னர் கார் மீது கல்வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை :

 

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது  கடும் தாக்குதல் நடத்தி  உள்ளனர்.  

தமிழகத்திலேயே, தமிழக ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக  ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு  சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழக ஆளுநருக்கே  பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு  பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.  

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு  அடைவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும்  ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்தத் தாக்குதலுக்கு கடுமையான  கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல்துறையை  தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில்  சொல்லப்போகிறார்?  

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.