தருமபுரம் ஆதீனத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என் ரவிக்கு விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சியினரும் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினரும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வந்த ஆளுநர் ஆர்.என் ரவி திருக்கடையூர் கோயிலில் வழிபட்டார். கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட வழிபாடுகளையும் அவர் செய்தார். பின்னர் தருமபுரம் ஆதினத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. வழியில் மன்னம்பந்தல் என்ற இடத்தில் திரண்டிருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், இடதுசாரி கட்சியினர் மற்றும் திராவிட கழகத்தினர் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டினர். தமிழ்ப் பாரம்பரியம் கொண்ட தருமபுரம் ஆதினத்திற்கு ஒரே மொழி கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் ஆளுநர் செல்லக்கூடாது என போராட்டக்காரர்கள் கூறினர்.
மேலும் நீட் விலக்கு மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை கண்டித்தும் கருப்புக்கொடி காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். ஆளுநர் திரும்பிச்செல்லக் கூறியும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுக்க முயன்ற நிலையில், அவர்கள் கருப்புக்கொடிகளை சாலையில் வீசி எறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரத்திற்கு வந்த ஆளுநருக்கு பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட அக்கட்சியினரும் ஆன்மிக அமைப்பினரும் தேசியக் கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM