திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆம்வே நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளதால், 2 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமல்லாது ஆம்வே தயாரிப்புகளின் வாடிக்கையாளர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம்வே நிறுவனம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற திட்டத்தின் வாயிலாக கடந்த 20 ஆண்டுகளாக 27 ஆயிரத்து 562 கோடி ரூபாயை பல்வேறு வகையில் வசூலித்தது. இதில் நிறுவன உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களுக்கு கமிஷனாக 7 ஆயிரத்து 588 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மீதத்தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் ஆம்வே நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஆம்வே இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான நிலம், தொழிற்சாலை, இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் வங்கி நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் 758 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். குறிப்பாக வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக மட்டும் 345.94 கோடி ரூபாய் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆம்வே இந்தியா நிறுவனத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இங்கு சாம்ப், சோப் உட்பட அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் நிறுவனச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளாதல், 2 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆம்வே நிறுவனம் தரப்பில், “அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை 2011-ம் ஆண்டு வரை பின்தேதியிட்டட விசாரணைக்கு சம்பந்தப்பட்டது. அதன்பிறகு எந்தவித பிரச்னையும் இல்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டரீதியாக அணுகவுள்ளோம். எங்களின் 5.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எங்களின் சேவையை வழங்குவோம். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். எங்களின் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை வழக்கம் போல இயங்குகிறது. அமலாக்கத்துறையினர் சொத்துகளை முடக்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளனர். அதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், அமலாக்கத்துறையினரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தொழிற்சாலை முழுமையாக முடக்கப்பட்டால் நேரடியாக 2 ஆயிரம் தொழிலாளர்ளும், மறைமுகமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.