திருமலை: மாப்பிள்ளை பிடிக்காததால் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண், தனது தோழிகளை சந்திக்க வேண்டும் எனக்கூறி வாலிபரை மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று அவரை கழுத்தறுத்து கொல்ல முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் படேரு மண்டலத்தை சேர்ந்தவர் ராமு (29). இவர் ஐதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் அதே மாவட்டத்தில் உள்ள ரவிக்கமடம் மண்டலத்தை சேர்ந்த புஷ்பா (24) என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் சில வாரங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் 29ம்தேதி இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.இந்நிலையில் ராமுவை திருமணம் செய்ய புஷ்பாவுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. இதுதொடர்பாக பெண் பார்த்த முதல் நாளிலேயே தனது பெற்றோரிடம் தெரிவித்தாராம். ஆனால் அவரது பெற்றோர், மகளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த, புஷ்பா திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் ராமுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.அதன்படி ராமுவுக்கு ேபான் செய்து, ‘எனது தோழிகள் மற்றும் நண்பர்கள் உங்களை சந்திக்க வேண்டும் என கேட்கின்றனர்’ என கூறினார். இதனை ஏற்ற ராமு, விடுமுறை எடுத்துக்கொண்டு வருவதாக கூறினார். அதன்படி நேற்று அனகப்பள்ளிக்கு ராமு வந்தார். அங்கு காத்திருந்த புஷ்பா, தனது தோழிகள் அங்குள்ள மலைக்கோயிலில் காத்திருப்பதாக கூறினார். ஆனால் நடக்கப்போகும் விபரீதத்தை உணராத ராமு, அவருடன் ஜாலியாக பேசியபடியே மலைக்கு சென்றார். அப்போது புஷ்பா, தனது ேதாழிகளை காட்டுவதாகவும், சர்ப்ைரஸ் தருவதாகவும் கூறி கோயிலுக்கு பக்கவாட்டு பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றபோது கண்களை மூடும்படி கூறியுள்ளார். அதன்படி ராமு கண்கனை மூடிக்கொண்டார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமுவின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமு, ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பக்தர்கள் ராமுவை மீட்டு அனகப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனகப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து புஷ்பாவை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘மணமகன் பிடிக்காததால் அவரை ஏமாற்றி அழைத்து வந்து கோயிலில் கொலை செய்ய திட்டமிட்டேன்’ என கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.