டர்பன்: தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு இதுவரை 443 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு – நடால் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 443 பேர் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். மாயமானவர்களைக் கண்டறியும் பணியில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை நாசமாகியுள்ளன. இதில் சேதமடைந்த பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 500 வரை இருக்கும். வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
குவாசுலு – நடால் மாகாணத்தின் ஆளுநர் சிஹ்லே ஜிகலலா கூறும்போதும், “ கடந்த வாரம் பெய்த மழை அனைத்தையும் நாசம் செய்துவிட்டது. துறைமுகப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள், வீடுகள், உள்கட்டமைப்புகள் சேதம் இந்த இயற்கைப் பேரழிவை நமது மாகாணத்தின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான ஒன்றாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 40,000 பேர் வீடற்றவர்களாக மாறி உள்ளனர்.
வெள்ள நிவாரண நடவடிக்கையாக முதற்கட்டமாக சுமார் 68 மில்லியன் டாலர்களை தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது.