திருப்பதி:
செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா. ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.
முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் இணைந்தார். ஜெகன்மோகன் கட்சியின் மகளிர் அணித்தலைவியாகவும் உள்ளார்.
ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியில் எம்.எல்ஏ.வாக உள்ள ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவரது சொந்த தொகுதியான நகரிக்கு முதல் முறையாக நேற்று மாலை சென்றார்.
திறந்தவேனில் நின்றபடி அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அந்த ஊர் மக்கள் ஒன்றாகத் தெருவின் இரு பக்கமும் வரிசையாக நின்று அவரை மலர்த்தூவி வரவேற்றனர்.
மேலும் கிரேன் மூலம் 1 டன் எடை கொண்ட ராட்சத ரோஜா மாலை அணிவித்து நடிகை ரோஜாவை வரவேற்றனர். மாலை அணிவித்த காட்சி சினிமாவில் உள்ளதைப் போல பிரம்மாண்டமாக இருந்தது. மக்கள் மலர்த்தூவி வரவேற்பதை மிகவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டு அமைச்சர் ரோஜா நன்றி தெரிவித்தார். ரோஜா இன்று திருப்பதியில் தரிசனம் செய்தார்.