நடிகை பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிக்கு மிரட்டல் – நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய கூட்டுச்சதி தீட்டியதாக சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பல் ஒன்றால் காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த துன்புறுத்தலை வீடியோவாக எடுக்க கூலிப்படையை ஏவியதாக பிரபல மலையாள முன்னணி நடிகரான திலீப், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

85 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் அவர் பிணையில் வெளி வந்தார். இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீசார், துணை காவல் கண்காணிப்பாளர் பைஜு பவுலோஸ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, கொச்சி அங்கமாலி குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

image

முதல் தகவல் அறிக்கையில் 14-வது குற்றப் பிரதியாக இருந்த நடிகர் திலீப் குற்றப்பத்திரிக்கையில், 8.வது குற்றப் பிரதியாக சேர்க்கப்பட்டார். ஓடும் காரில் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும், வழக்கின் முக்கிய ஆவணங்களும் சிறப்பு போலீஸ் குழுவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், நடிகை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும், அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், மலையாள திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரகுமார் திடுக்கிடும் புகார் ஒன்றை சைபர் க்ரைம் போலீசில் அளித்தார்.

image

ஆவணங்களோடு அளிக்கப்பட்ட அந்த புகாரின் அடிப்படையில், கொச்சி சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாகவும், திலீப்பின் சகோதரர் அனுப், திலீப்பின் சகோதரியின் கணவர் சூரஜ், ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்யச் கோரி நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தன் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு பொய் வழக்கு என்றும், நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்யாவிட்டால் இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் நடிகர் திலீப் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் திலீப்பின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போத நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளது என்றும், விரிவான விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் அரசு தரப்பின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

image

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டியது மற்றும் கொலை செய்ய கூட்டுச் சதித் திட்டம் தீட்டி இதுதொடர்பான நடிகர் திலீப்பின் உரையாடல்கள் அடங்கிய 10 ஆவணங்களை, திலீப்பின் முதல் மொபைல் போனில் இருந்து எடுத்து சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சையத் ரகுமான், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு அதிகாரிகளை, நடிகர் திலீப் மிரட்டியது மற்றும் கொலை செய்ய திட்டமிட்டு குறித்த போதிய ஆதாரங்கள் இருப்பதால், இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசாரே தொடர்ந்து நடத்தலாம் என்று கூறி, நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.