நவீன கல்வி முறை மூலம் குழந்தைகள் பயன்பெறுவது பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பனஸ்கந்தா பகுதியிலுள்ள பனாஸ் பால் பண்ணையில் விரிவாக்க திட்டங்களை துவங்கி வைத்ததோடு, அங்கு பால் உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைவது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், நவீன கல்வி முறை மூலம் குழந்தைகள் பயன்பெறுவது பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றதோடு, நேற்றைய தினம் தாம் குஜராத்தின் காந்திநகரிலுள்ள வித்ய சமிக் ஷா கேந்திர பள்ளியை ஆய்வு செய்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டார். அங்கு பயிற்றுவிக்கப்படும் கல்வி முறையும், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும் ஆச்சரியமாக இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வித்யா சமிக் ஷா கேந்திரா மூலம் நாடு முழுவதும் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றார்.
மேலும், மத்திய, மாநில கல்வி அமைச்சக அதிகாரிகள், இங்குள்ள வித்ய சமிக்ஷா கேந்திர பள்ளியை பார்வையிட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், குஜராத்திலுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை, வருங்கால சந்ததியினரை வடிவமைக்கும் சக்தியாக வித்யா சமிக்ஷா கேந்திர பள்ளி மாறி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.