நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக இஸ்திர நிலையை ஏற்படுத்துவதன் ஆரம்ப நடவடிக்கையாக 19 ஆவது அரசியல் யாப்பு சட்ட திருத்தத்தின் தேவையை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் உரையாற்றினார். 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையில் உள்ள உறுப்பினர்களுக்கு தெளிவு உண்டு.
வரலாற்றில் இருந்து எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தற்பொழுது மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
சமகால அரசாங்கம் எப்பொழுதும் விருப்பத்துடன் தமது மக்களை சிரமத்துக்கு உட்படுத்தவில்லை.
இருப்பினும் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மின் துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தொடர்பில் நெருக்கடி நிலை ஆகியவற்றை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் ,மத்திய வங்கியின் செயலாளர் ஆகியோர் தற்பொழுது தமது பொறுப்புக்களை நாட்டுக்காக நிறைவேற்றி வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகுந்த ஆழ்ந்த சிந்தனையுடன் குறுகிய கால நிலையை முகாமைத்துவம் செய்துகொள்வதைப் போன்று நீண்ட காலம் இவ்வாறான நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படாது இருப்பதற்கு நிலையான அடித்தளத்தை இட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு விசேட திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும். அதற்காக அரசாங்கம் எதிர்கட்சிக்கு முழு மனதுடன் விடுத்த அழைப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில நல்ல பதில்கள் கிடைத்துள்ளன. நட்புறவான நாடுகள் பொருளாதார முகாமைத்துவத்திற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 19ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வுகான ஒரே வழி பேச்சுவார்த்தையாகும். காலி முகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தாம் இதற்கு முன்னர் அறிவித்திருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடு தற்போது முகங்கொடுத்துள்ள சிக்கலான நிலை தொடர்பில், இரண்டு வருடங்களுக்கு முன்னரே எதிர்க்கட்சியினால்; சுட்டிக்காட்டப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். வரி நிவாரணத்தை வழங்கி, அரச வருமானத்தை குறைத்தமை பிரச்சினைக்கான ஒரு காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். உணவு, மருந்து பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இருந்த பணம், கடன் மற்றும் வட்டிகளை செலுத்த அரசாங்கம் பயன்படுத்தியதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க:
தற்போது முழு நாடும் எம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடு இன்று பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. வரவு செலவுத்திட்டம் திருத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கு நாட்டின் நிதி நிர்வாகத்தினை வழங்க வேண்டும். அதற்கு பாராளுமன்ற குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில், தற்பொதைய பிரச்சினைக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டார். இந்த நிலைமைக்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் சுமார் இரண்டு பில்லியன் ரூபா நட்டத்தை அடைவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதனாலேயே, எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீன்பிடித்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எரிபொருளை பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சபையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை அமர்வுகள் முற்பகல் 11.45ற்கு சபாநாயகரினால் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, அரசாங்கத்திலிருந்து விலகி, தனிக்குழுவாக செயற்படும் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பிரச்சினை, சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்தாலும், தொடர்ந்தும் தனிக்குழுவாக செயற்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.