நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னிபேருந்து, கார் அடுத்தடுத்து மோதல்… 2 பேர் பலி, 14 பேர் படுகாயம்

தூத்துக்குடியிலிருந்து உப்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியே சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்தையன் (64) என்பவர் ஓட்டினார். அப்போது அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் லாரி சென்றுகொண்டிருக்கும் போது, லாரி டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் லாரி ஓட்டுநர் அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டயர் மாற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் திசையன்விளையிலிருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்து நடந்த அதே நேரத்தில், ஆம்னி பேருந்தின் பின்னால் வேகமாக வந்த காரும் ஆம்னிபேருந்தின் பின்னால் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் லாரியில் பஞ்சரான டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர் சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உருக்குலைந்த ஆம்னி பஸ்

மேலும் ஆம்னிபேருந்து மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்துவந்த அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சகாயஜோஸ் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சைப் பலனின்றி ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரவிதாகூர்(40) என்பவர் உயிரிழந்தார்.

மேலும், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆம்னிபேருந்து கிளினர் தூத்துக்குடியைச் சேர்ந்த உதயகனி மற்றும் பேருந்தில் பயணம் செய்த தங்கமாரியப்பன் ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சாலை விபத்தில் உருக்குலைந்த கார்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் முத்துக்குமார் பேருந்து மற்றும் காரில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த பத்மாவதி, ராஜா, சுயம்புலிங்கம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்தால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.