பயங்கரவாதத்துக்கு நிதி, கறுப்புப்பண சலவை.. கிரிப்டோகரன்ஸியின் இரு பெரிய ஆபத்துகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன்: கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் நிலவும் சூழலில் அதனை ஊக்குவிப்பது பயங்கரவாதத்துக்கு நிதி சேர்வதையும், கறுப்புப் பணம் சலவை செய்யப்படுவதையும் ஊக்குவிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி 20 நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

முதல் நாளில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தலைமையில் நடந்த ‘மனி அட் ஏ க்ராஸ்ரோட்’ (“Money at a Crossroad”) என்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

பின்னர், ஐஎம்எஃப் மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன், “கிரிப்டோகரன்சியை ஊக்குவிப்பது பயங்கரவாதத்துக்கு நிதி சேர்வதையும், கறுப்புப் பணம் சலவை செய்யப்படுவதையும் ஊக்குவிக்கும். அதனால் தொழில்நுட்பம் கொண்டு கிரிப்டோகரன்சியை முறைப்படுத்துவதே ஒரே தீர்வு. அந்த தொழில்நுட்பம் அதிக சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதை உருவாக்க வேண்டும். எந்த ஒரு நாடும் தனியாக இதை சாதித்துவிட முடியாது.

டிஜிட்டல்மயமாக்குதலில் இந்தியா மேம்பட்டுள்ளது. 2019 ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு 85% அதிகரித்துள்ளது. அதுவே அதே காலக்கட்டத்தில் உலகளவில் 64% மட்டுமே டிஜிட்டல்மயமாக்குதல் அதிகரித்திருந்தது. பெருந்தொற்று காலத்தில் இந்தியா டிஜிட்டல்மயமாக்குதலை திறம்பட செய்துள்ளது. சாமான்ய மக்களும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது” என்றார்.

ஐஎம்எஃப் மாநாட்டை ஒட்டி நிர்மலா சீதாராமன் வாஷிங்டன்னில் நடந்த அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இலங்கை, தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா நாட்டு நிதியமைச்சர்களையும் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.