புதுடில்லி : ”வரும் 2070ம் ஆண்டுக்குள், கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாடாக இந்தியா உருவெடுப்பதுடன், பருவநிலை மாற்றத்தில் மற்ற நாடுகளும் இலக்கை எட்ட ஆதரவு அளிக்கும் நாடாக அது உருவாகும்,” என, ஐ.நா., உறுப்பினர் ரேச்சல் கைட் தெரிவித்தார்.
ஐ.நா., பொதுச் செயலரின் பருவநிலை நடவடிக்கை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ரேச்சல் கைட் டில்லி வந்துள்ளார். பருவநிலை தொடர்பான பிரச்னைகளை சமாளிப்பது குறித்து இங்குள்ள கொள்கை வகுப்பாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின், ரேச்சல் கைட் கூறியதாவது:
இங்கு நான் சந்தித்து பேசிய அனைவருமே பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி குறித்து சிந்தித்து வருகின்றனர். பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்யும் நாடாக மட்டும் இல்லாமல், அதை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியாவால் உருவாக முடியும்.நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கதக்க எரிசக்திக்கு மாறுவது, போக்குவரத்து துறையில் மாற்றங்களை உருவாக்குவது வாயிலாகவே பசுமை எரிசக்தி என்ற மாற்றம் சாத்தியமாகும்.
ஆனால், வளர்ந்த நாடுகளின் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே இந்த முயற்சி முழுமை பெறும்.வரும் 2070ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாடாக இந்தியா முற்றிலுமாக மாறுவது மட்டுமின்றி, பருவநிலை மாற்றத்தில் மற்ற நாடுகளும் தங்கள் இலக்குகளை எட்ட உதவி செய்யும் நாடாக இந்தியா உருவாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement