புதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு பின்பு குடும்பத்திற்கு அத்தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.
ஆனால், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது; பணிக்கொடை, மருத்துவ காப்பீடு போன்ற எந்த பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்த இந்த புதிய பங்களிப்பு திட்டத்தை எதிர்த்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சுமார் 19 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி அரசு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதற்கு பதில் அளித்து நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன் கடிதம் எழுதினார். அதில், “1.4.2003-லிருந்து அதிமுக ஆட்சி காலத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதில் 6 லட்ச அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர்.
ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை வல்லுநர் குழு ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், கூடிய விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அரசாணைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.