திருவனந்தபுரம்:
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி சுபைர் வெட்டி கொல்லப்பட்டார்.
சுபைர் கொல்லப்பட்ட மறுதினமே பாலக்காடு பஜாரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை ஒரு கும்பல் வெட்டி கொன்றனர்.
அடுத்தடுத்து நடந்த கொலைகளால் பாலக்காட்டில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே பாலக்காட்டில் அமைதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையும், அனைத்து கட்சி கூட்டமும் நேற்று நடந்தது. இதில் மந்திரி கிருஷ்ணன் குட்டி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிநிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர், கூட்டம் தொடங்கியதும், அதனை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.
பாலக்காட்டில் நடந்த அரசியல் கொலைகள் குறித்து விசாரணை நடத்தும் போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரிப்பதாக குற்றம்சாட்டி கூட்டத்தை புறக்கணிப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.
இதுபற்றி அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறும்போது, பாலக்காட்டில் போலீசாரின் விசாரணை நேர்மையாக நடக்கிறது. இங்கு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாலக்காட்டில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஆண்கள் பின்னால் அமர்ந்து செல்லவும் போலீசார் தடை விதித்து உள்ளனர். இது பாலக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.