டெல்லி : மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டு தோறும் 2 முறை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு இன்று பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆகிறது. இந்த தேர்வை அடுத்த மாதம் இறுதியில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டிற்கு 2 முறை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த 2 தேர்வுகளையும் 45 நாட்கள் இடைவெளியில் எழுதும் வகையில் திட்டம் வகுக்கப்படுகிறது இந்த முடிவால் மாணவர்கள் 2வது வாய்ப்பில் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தி கொள்ள முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். நீட் தேர்வை போன்று மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வையும் தமிழ்நாடு அரசு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.