மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ,விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான ஒழுங்குவிதிகளுக்கு சபையில்  அனுமதி

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021.12.24ஆம் திகதிய 2259/54ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயட் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2022.01.18 ஆம் திகதிய 2263/2ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன இன்று (19) பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை இந்த இணைப்புக்களில் பார்வையிடவும்

http://documents.gov.lk/files/egz/2021/12/2259-54_T.pdf

http://documents.gov.lk/files/egz/2022/1/2263-02_T.pdf

பாராளுமன்றம் இன்று மு.ப 10 மணிக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. நேற்றையதினம் (18) தனது தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்டார். தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் காணப்படும் அமைதியின்மைக்கு நீண்ட கால தீர்வாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கும், குறுகியகால மற்றும் துரிதமாக எடுக்கப்படவேண்டிய தீர்வுகளாக கடந்த காலங்களில் பின்னடைந்திருந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் என்ற காலத்தின் தேவையை அடிப்படையாகக் கொண்டு 21 வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்சித் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதேவேளை, ஆளும் கட்சியின் முதற்கோலாசானாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் உள்ள ஆளும் கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தில் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்றையதினம், சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்க்ஷ இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து எழுப்பிய பிரச்சினைக்குப் பதில் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் நடவடிக்கை மற்றும் அவருக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளின் பின்னர் பாராளுமன்றம் நாளை (20) மு.ப 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.