ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமைகளை வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் கட்டாயமாக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசு, நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமை உள்ளிட்ட மாடுகளை வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் மற்றும் 100 சதுர இடம் கட்டாயம் என அறிவித்துள்ளது.
கால்நடைகள் வழி தவறி வருவது கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு 10,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உரிமம் இல்லாமல் ஒரு வீட்டில் ஒரு பசு மற்றும் கன்று மட்டுமே வைக்க அனுமதிக்கப்படும் என்றும், மேலும் கால்நடைகளுக்கு தனி இடம் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவை முனிசிபல் கார்ப்பரேஷன்கள் மற்றும் கவுன்சில்களின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உரிமம் பெற, விண்ணப்பதாரர் கால்நடைகளை சரியான சுகாதாரத்துடன் பராமரிக்க முன்மொழியப்பட்ட இடத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வருடாந்திர உரிமக் கட்டணமாக 1,000 ரூபாய் வசூலிக்கப்படும். விலங்குகள் இப்போது உரிமையாளரின் பெயர் மற்றும் எண்ணுடன் குறியிடப்பட வேண்டும்.
மேலும், கால்நடைகளை வளர்க்கும் இடத்தின் சுகாதாரத்தில் சமரசம் ஏற்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மாட்டு சாணத்தை நகராட்சி பகுதிக்கு வெளியே அப்புறப்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் தீவனம் விற்பனை செய்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.