சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் பாஜக வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவின் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு மற்றும் வர்த்தக பிரிவு தலைவர் ஐ.சரவணன் ஆகியோர் தலைமையில் விலை கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தினை வைக்க முயன்றனர்.
இதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பா.ஜனதா கட்சியினர் நியாய விலை கடையில் உள்ள பலகையில், ‘மத்திய அரசு சார்பாக ஒரு நபருக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்’ என எழுதி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதன்படியே கடை பணியாளர் எழுதி வைத்தார்.
இதனை அடுத்து, திமுகவினரும் அங்கு திரண்டனர். பாஜகவினர் பிரதமரின் புகைப்படத்தை வைக்க அனுமதி தர மறுத்தாள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்க அனுமதி தருமாறு கேட்டனர்.
காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்து, பாஜகவினரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பாஜகவினர் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களில் 23 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.