லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தொடங்கிய ரஷிய ராணுவம்…!!

கீவ், 
உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதத்தை எட்டி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
ஏப்ரல் 19,  03.05 a.m
டான்பாசில் கவனம் செலுத்துவதாக ரஷியா கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலின் தொடக்கத்தை அந்நாட்டு அதிபர் ஜெலெனஸ்கி அறிவித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
ஏப்ரல் 19,  02.46 a.m
கிழக்கு உக்ரைனில் ரஷிய தாக்குதல் ‘தொடங்கிவிட்டது’: உள்ளூர் அதிகாரிகள் தகவல்
ஏப்ரல் 19,  02.06 a.m
கிழக்கு உக்ரைனில் ரஷிய தாக்குதல்களில் குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ஏப்ரல் 19,  01.41 a.m
ரஷியப் படைகள் திங்களன்று டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் முனைகளில் கிட்டத்தட்ட அனைத்து பாதுகாப்புகளையும் உடைக்க முயன்றதாக உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் தெரிவித்தார்.
ஏப்ரல் 19,  12.32 a.m
உக்ரைன்: கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷியா ராணுவம் தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறது
ஏப்ரல் 19,  12.11 a.m
உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ நிலைகள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை.
உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த போரில் ரஷியாவின் கனவு நிறைவேறவில்லை.
தலைநகர் கீவை கைப்பற்ற முடியாமல்போன நிலையில் துறைமுக நகரமான மரியுபோல் நகரை வீழ்த்த முழு மூச்சாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.
ஆனால் மரியுபோல் நகரை பாதுகாத்து வரும் உக்ரைன் வீரர்கள் ரஷிய படைகளிடம் அடிபணிய மறுத்து, தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் மரியுபோல் நகரம் மீது ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் அனைத்து நகரங்களையும் இலக்காக வைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடுகையில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லிவிவ் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்புகள் குறைவாகவே உள்ளன.
இதனால் மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட பேரழிவை சந்தித்து வரும் நகரங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கான புகலிடமாக மேற்கு நகரங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு நகரமான லிவிவ் மீது நேற்று காலை ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கின. அந்த நகரில் உள்ள 3 ராணுவ நிலைகள் மற்றும் கார் டயர் பழுதுநீக்கும் தொழிற்சாலை மீது அடுத்தடுத்து பல ஏவுகணைகள் வீசப்பட்டன.
இதில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 11 பேர் படுகாயமடைந்ததாகவும் லிவிவ் நகர மேயர் ஆன்ட்ரி சடோவி தெரிவித்தார்.
இதனிடையே உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ரஷிய படைகளின் பெரிய தரைவழி தாக்குதலை எதிர்க்கும் உக்ரைன் ராணுவத்தின் திறனை குறைக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள ஆயுத தொழிற்சாலைகள், ரெயில்வே மற்றும் பிற உள்கட்டமைப்புகளை இலக்காக வைத்து ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக ராணுவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தலைநகர் கீவ் மீதும் ரஷிய படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கீவ் அருகே உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றைஇரவோடு, இரவாக நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே போல் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்க் மீதும் நேற்று காலை ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கீவில் ரஷிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்புகளை சரமாரியாக தாக்கின. இதில் அங்குள்ள வீதிகளில் உடைந்த கண்ணாடி மற்றும் பிற குப்பைகள் சிதறிக்கிடந்ததை காண முடிந்தது.
இதற்கிடையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான 136 போர் விமானங்கள், 471 ஆளில்லா விமானங்கள், 249 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், 2,308 பீரங்கிகள் மற்றும் பிற கவச போர் வாகனங்கள், 254 ராக்கெட் அமைப்புகள், 998 பீரங்கி துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் ரஷியபடைகள் சித்ரவதைகள் மற்றும் கடத்தல்களை நடத்திவருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளை கடத்துவதாகவும், அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதோடு, மனிதாபிமான உதவிகளை திருடுவதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.
இது ரஷியாவின் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என சாடிய ஜெலன்ஸ்கி ரஷியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும், தங்களுக்கு இன்னும் அதிகமான ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.