திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடுகுலப்பள்ளி மண்டலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமாநாயுடு (வயது 28). இவர் ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பி.எச்.டி படித்து வருகிறார். ராமா நாயுடுவுக்கும் ராதிக மாட்டம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்று இருந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புஷ்பா மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக வரவழைத்தார். மணமகன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என கூறி ராமாநாயுடுவை அழைத்து கேக் வாங்கிக்கொண்டு புஷ்பா வீட்டிற்கு வந்தனர்.
கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க உள்ளதால் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என மணமகனிடம் புஷ்பா தெரிவித்தார்.
இதற்கு ராமாநாயுடு சம்மதம் தெரிவித்தார். தன்னுடைய துப்பட்டாவால் ராமாநாயுடு கண்ணை கட்டினார். தனக்கு பரிசு கிடைக்கும் என்று ராமாநாயுடு ஆவலுடன் இருந்தார். ஆனால் புஷ்பா தான் திட்டமிட்டபடி தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமாநாயுடு கழுத்தை திடீரென அறுத்தார்.
ராமாநாயுடு கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பரிசை எதிர்பார்த்திருந்த ராமாநாயுடு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
புஷ்பா அவரை அனகா பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அப்போது டாக்டர்களிடம் ராமாநாயுடு தடுக்கி கத்தியின் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து புதிய பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில் நடந்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள புஷ்பாவை தேடி வருகின்றனர்.