வேலூர் மாவட்டத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளை சாவடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளியான 21 வயதான பாலாஜி, கடந்த 17 ஆம் தேதி இரவு சோளிங்கர் அருகில் மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
அதில் பலத்த காயமடைந்து அவர், வேலூர் சி எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூளை சாவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்ததையடுத்து, இருதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அவரது இருதயம், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் , கல்லீரல், ஒரு சிறுநீரகமும் மற்றும் இரண்டு கண்களும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.