தனுஷ், நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ வெளியாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் ‘உத்தமபுத்திரன்’ படத்திற்குப் பிறகு இப்போது மீண்டும் தனுஷுடன் கைகோத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷை வைத்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். இங்கே ‘யாரடி நீ மோகினி’ நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் மித்ரன் ஆர். ஜவஹர்.
“இத்தனை வருஷம் ஆகியும், மக்கள் மனசில ‘யாரடி நீ மோகினி’ இடம்பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. தனுஷ் சார், நயன்தாரா, கே.விஸ்வநாத் சார், ரகுவரன் சார்னு ஒரு முதல் பட இயக்குநருக்கு இவ்ளோ பெரிய நட்சத்திரங்கள் அமைஞ்சது இப்பவும் ஆச்சரியமா இருக்கு.
நான் ‘புதுப்பேட்டை’யில் செல்வராகவன் சார்கிட்ட ஒர்க் பண்ணி முடிச்சதும், அவர் தெலுங்கில் ‘ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே’ பட ஒர்க்ல இருந்தேன். அதே சமயம், கஸ்தூரிராஜா சார் தமிழ்ல தனுஷ் சாரை வச்சு ஒரு படம் பண்ணலாம்னு டிஸ்கஷன் போனது. அப்பத்தான் செல்வராகவன் சார், ‘மித்ரனே பண்ணட்டும்’னு இந்தப் படத்தை இயக்க வச்சார்.
‘ஆடவாரி’ ரீமேக்குனு இந்தப் படத்தை சொல்ல முடியாது. ஏன்னா, ‘ஆடவாரி’யோட சீன்களோட எடிட் ஒர்க்கும், படப்பிடிப்பும் ஒவ்வொரு பக்கம் போயிட்டு இருந்தது. நான் தெலுங்கு படத்தோட எடிட்டிங்ல இருந்த போதுதான் கஸ்தூரிராஜா சார் என்கிட்ட ‘நீ இயக்குநர் ஆகிட்டப்பா… அங்கே வந்து ஷூட்டிங்கை ஆரம்பிச்சிடு’னு சொன்னார். செல்வா சாரும் ‘நீ இந்தப் படம் முடியற வரை காத்திருக்க வேண்டாம். ‘ஆடவாரி’ தமிழுக்கு எழுதின கதைதான். முழு ஸ்கிரிப்டையும் குடுத்திடுறேன்’னு சொல்லி கொடுத்துட்டார். எனக்கும் செல்வா சார் கதை மீதான நம்பிக்கை இருந்ததால இயக்க வந்துட்டேன்.
நான் ரெகுலராகவே விகடன் படிப்பேன். ‘யாரடி நீ மோகினி’ டைட்டிலுக்கு ஃபான்ட் கூட, ஒரு ஓவியர்கிட்ட விகடன் ஸ்டைலை ரெஃபரன்ஸா கொடுத்து வரைந்ததுதான். தனுஷ் சாரை அவரோட முதல் படத்துக்கு முன்னாடி இருந்து தெரியும். இப்பவும் கூட அவர் ரொம்ப ஜாலியா அமைதியா ஒர்க் பண்ணின படம்னா ‘யாரடி நீ மோகினி’ தான்னு சொல்லுவார். நயன்தாராவைத் தயாரிப்பாளரும் நானும் சேர்ந்துதான் தேர்ந்தெடுத்தோம். அவங்களோட நடிக்க தனுஷ் சார் கூட யோசிச்சார். படத்துல அவங்க பாஸ் கேரக்டர்… ஸோ. கதைக்கு பொருத்தமா இருந்ததால, அவங்கள கமிட் பண்ணினோம்.
என்னோட சின்ன வயசில இருந்தே எம்.ஆர்.ராதா சார், ரகுவரன் சார், மோகன் சார்னு பலரையும் பிடிக்கும். தனுஷ் சாரோட அப்பா கேரக்டருக்கு ரகுவரன் சார்தான் வேணும்னு சண்டை போட்டெல்லாம் கேட்டு வாங்கியிருக்கேன். அவர் அப்பவே பெரிய நடிகர். கதையை கேட்டுட்டு பிடிச்சிருக்குனு சொன்னதோடு மட்டுமில்லாமல், நுட்பமான தகவல்கள் எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டார். அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி அவரே லுக் ஷூட் செய்து ‘உங்களுக்கு எந்த லுக் வேணும்?’னு கேட்டு போட்டோஸை அனுப்பி வச்சார்.
அவருக்கும் தனுஷ் சாருக்குமே பெரிய கெமிஸ்ட்ரி செட் ஆச்சு. படத்துல கருணாஸ் சாரோட டெலிபோன் காமெடி ஷூட் பண்ணும் போது, தெலுங்கில் அதை சுனில் பண்ணியிருந்தார். எனக்கு அந்த வெர்ஷன் பிடிச்சிருந்தது. ஆனா, செல்வா சார், ‘கருணாஸ் சார் பண்ணியிருக்கறதுதான் இங்கே சரியா இருக்கும்’னார். டெக்னீஷியன் டீமும் நல்ல டீமா அமைஞ்சிருந்தது. இப்பவும் இந்தப் படம் பேசப்படுறது சந்தோஷமா இருக்கு.”
`யாரடி நீ மோகினி’ குறித்து இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் பேசிய முழு வீடியோவையும் இங்கே காணலாம்.