வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லீவ் : உக்ரைன் – போலந்து எல்லையோரம் அமைந்துள்ள லீவ் நகரில், ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
பிப்ரவரி, 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.கிழக்கு உக்ரைன் நகரங்களில் மட்டும் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்ய படையினர், தங்கள் போர்க்கப்பல் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, தலைநகர் கீவிலும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போலந்து எல்லையோரம் அமைந்துள்ள உக்ரைன் நகரான லீவில், ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, லீவ் நகர மேயர் ஆண்டிரி சடோவ்யி நேற்று கூறியதாவது:தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள், லீவ் நகரில் வந்து தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், லீவிலும் ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். விடிய விடிய நடத்தப்பட்ட தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில், மூன்று ராணுவ ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட பல பிரதான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலால், உக்ரைனில் சிக்கி உள்ள மக்களை வெளியேற்றும் பணிகளை, அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.
Advertisement