ஜலதோஷம் பிடித்திருக்கும்போது வொர்க் அவுட் செய்யலாமா? வொர்க் அவுட் செய்தால் ஏற்படுகிற வியர்வை ஜலதோஷத்தை அதிகரிக்காதா? ஜலதோஷம் இருந்தாலும் வொர்க் அவுட் செய்தால் சீக்கிரம் குணமாகும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஜலதோஷம் பிடித்திருந்தால் சிலருக்கு மூக்கடைப்பும் நுரையீரலில் சிரமமும் இருக்கும். அந்த நிலையில் வொர்க் அவுட் செய்தால் உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமமாக உணர்வீர்கள். எனவே கடுமையான ஜலதோஷம் பிடித்திருந்தால் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்க்கவும். மிதமான ஜலதோஷம் என்றால் உடற்பயிற்சிகள் செய்வதில் பிரச்னை இல்லை.
மூக்கடைத்திருக்கும்போது சிலருக்கு தலைச்சுற்றுவது போன்ற உணர்வும் களைப்பும் ஏற்படலாம். எனவே இது அவரவர் உடல்நிலையைப் பொருத்த விஷயம்.
வொர்க் அவுட் செய்தால் ஜலதோஷம் குணமாகும் என்பதெல்லாம் உண்மையல்ல. ஒவ்வொருவரது உடல்நிலையும் ஒவ்வொரு மாதிரியானது. சிலருக்கு லேசாக சளிப்பிடித்தாலே உடல் சோர்வாகி, எந்த வேலையும் செய்ய முடியாதபடி இருக்கும். சிலர் அதைப் பொருட்படுத்தால் எல்லா வேலைகளையும் செய்வார்கள். எனவே இந்த விஷயத்தில் உங்கள் உடல்நிலையைப் பொருத்துதான் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
கோவிட் காலத்தில் இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். சாதாரண ஜலதோஷம் என்று நினைத்துக்கொண்டு வொர்க் அவுட் செய்ய வேண்டாம். அது கோவிட் தொற்றாகவும் இருக்கக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சளிப்பிடித்ததால் நெஞ்சை அடைப்பதுபோல இருந்தால் தயவுசெய்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம்.