ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் ? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பீஸ்ட் இயக்குனர் நெல்சன் தான் ரஜினியின் புதிய படத்தை இயக்குகிறார் என்று ரஜினி தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகி உள்ளது…
பீஸ்ட் படம் குறித்து பல்வேறு ரசிகர்களின் விமர்சனத்தால் மனம் நொந்து போன நெல்சன், தனது டுவிட்டர் கணக்கில், தலைவர் 169 படத்தின் இயக்குனர் என்பதை நீக்கி இருந்தார்.
இதனால் ரஜினியின் புதிய படத்தை நெல்சனுக்கு பதில் வேறு இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நெல்சன் சார்பில் ரஜினியை தொடர்பு கொண்ட அனிருத், பீஸ்ட் படத்தில் நடந்த குளறுபடிகள் குறித்து எடுத்து கூறியதுடன், நெல்சன் தயார் செய்து வைத்துள்ள கதை மீது தனக்கு அதிக நம்பிக்கை உள்ளதாக ரஜினியிடம் எடுத்து கூறி இருக்கிறார்.
கடந்த 5 தினங்களாக மவுனம் காத்து வந்த ரஜினி, தன்னால் ஒரு இளம் இயக்குனரின் வாழ்க்கை கெட்டுப்போய்விட கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது. இயக்குனர் நெல்சனை அழைத்து தனது புதிய படத்திற்கு திட்டமிட்டபடி நீங்கள் தான் இயக்குனர் என்றும் உற்சாகமாக தயாராகும் படியும் வாழ்த்தி உள்ளார். இதையடுத்து நெல்சன் மீண்டும் தனது டுவிட்டர் கணக்கில் தலைவர் 169 என்று குறிப்பிட்டார். இருந்தாலும் ரஜினி தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினியின் டுவிட்டர் கணக்கில் கவர் போட்டோவாக நெல்சன் இயக்கும் புதிய படத்தின் ரஜினி புகைப்படம் அப்லோடு செய்யப்பட்டது . மேலும் ரஜினி தரப்பில் இருந்தும் ரஜினியின் புதிய படத்தை ஏற்கனவே அறிவித்தபடி நெல்சன் இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.