அசாஞ்சே நாடு கடத்தல் லண்டன் கோர்ட் அனுமதி| Dinamalar

லண்டன்,-அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, 50, ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார்.குறிப்பாக, அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், அசாஞ்சே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை, லண்டனில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது.

நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, அசாஞ்சே ஆஜரானார். அப்போது, அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கான ஒப்புதலைப் பெற, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு, அதற்கான ஆவணங்களை அனுப்பி வைத்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.அசாஞ்சேவை நாடு கடத்த, அமைச்சர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அமெரிக்காவில் அசாஞ்சேவுக்கு, 175 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.