சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ 2016-ல் தொடங்கப்பட்டது. ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் முழு உடலை பரிசோதனை செய்துகொள்ளும் இந்த மையத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ கடந்த 2018-ல் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய மையத்தில் ரூ.4,000 கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள மையத்தில் நவீன உபகரணங்களுடன், புதிய பரிசோதனைகள் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ என்ற பெயர் ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை திட்டம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா என்ற பெயர் நீக்கப்பட்டு, முழு உடல் பரிசோதனை மையம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய கூடுதல் பரிசோதனைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
Source link