அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சியது இந்தியாவின் பால் உற்பத்தி மிக அதிகம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

தியோதர்: இந்தியாவின் பால் உற்பத்தி உலகிலேயே மிக அதிகம் எனவும், இது அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சிவிட்டது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், தியோதர் என்ற இடத்தில்
உள்ள பனாஸ் பால் பண்ணையில் புதிய வளாகம் மற்றும் உருளை பதப்படுத்துதல் தொழிற் சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் பால் உற்பத்தியின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. இது அரிசி மற்றும் கோதுமையின் வருவாயை விட அதிகம். இதனால் பால் துறையில் சிறு விவசாயிகள் அதிக அளவில் பயனடைகின்றனர்.

இன்று, பால் அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இதில் கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா பால் உற்பத்தி செய்தாலும், மிகப் பெரிய பொருளாதார நிபுணர்கள் உட்பட பலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. கோதுமை, அரிசி மூலம் கிடைக்கும் வருவாய் கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு நிகராக இல்லை. பால்துறையில் மிகப் பெரிய பலன் அடைபவர்கள் சிறு விவசாயிகள்.

இவர்களின் மேம்பாட்டுக்காக வும், கிராம பொருளதாரத்தை ஊக்குவிக்கவும் புதிய பால் வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார். இதோடு பனாஸ் சமுதாய வானொலி நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், பாலாடை பொருட்கள் தயாரிப்பு, பால் பவுடர் தயாரிப்பு வசதிகளையும் பிரதமர் விரிவுபடுத்தினார். தமா பகுதியில் ஆர்கானிக் உரம் மற்றும் பயோ காஸ் ஆலையும் தொடங்கிவைக்கப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.