ஐதராபாத்: தெலங்கானாவில் இளம்பெண்ணை கடத்திச் சென்று அவரை 3 நாளாக வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கவுன்சிலர் மகன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டம் கொடாட் நகரை சேர்ந்த ஆளும் தெலங்கானார ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் உள்ளூர் மக்கள் பிரதிநிதி ஒருவரின் மகன் கவுஸ் பாஷா மற்றும் அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி ஆகியோர் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆட்டோவில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றனர். சில கிலோ மீட்டர் தூரம் சென்ற அவர்கள், அங்குள்ள வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். பின்னர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கட்டாயப்படுத்தினர். அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இருந்தும் அந்த பெண்ணை பலமாக தாக்கி, இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுயநினைவுக்கு வந்த அந்தப் பெண், அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரிடம் கூறினார். அதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து கோடாட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நரசிம்மராவ் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட கவுஸ் பாஷா மற்றும் அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி ஆகிய இருவர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுஸ் பாஷாவை பொருத்தமட்டில் அவர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நகராட்சி கவுன்சிலரின் மகன் ஆவார். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.