வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இதுவரை இல்லாத அளவில், ஆயுஷ் துறையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆயுஷ் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உற்பத்தியில் நாம் ஏற்கனவே இதற்கு முன் இல்லாத வளர்ச்சியை கண்டுள்ளோம். கடந்த 2014ல் ஆயுஷ் துறையானது 3 பில்லியன் டாலருக்கு கீழ் வருமானம் இருந்த நிலையில், தற்போது 18 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பாரம்பரிய மருந்து துறையில், ஸ்டார்ட் அப் கலாசாரத்தை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் ஆயுஷ் ஸ்டார்ட் அப்களில் இருந்து யுனிகார்ன்கள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மூலிசை செடிகளின் பொக்கிஷமாக இந்தியா திகழ்கிறது. இது ஒரு வகையில், நமக்கு பச்சை தங்கம் ஆகும். கோவிட் காலத்தில் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்த ஆயுஷ் உதவியது. இந்த நேரத்தில், சர்வதேச அளவில் ஆயுஷ் முதலீட்டு மற்றும் புத்தாக்க மாநாடு நடத்த வேண்டும் என தோன்றியது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
Advertisement