கேரளாவில் அதிகரித்து வரும் வகுப்புவாத மோதல்கள் குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், “ஆர்எஸ்எஸ் மற்றும் பிஎஃப்ஐ ஆகிய அமைப்புகள் வகுப்புவாத கலவரத்தை உண்டாக்கினால் அவற்றை கடுமையாக கையாள வேண்டும்” என்று கூறினார்.
பாலக்காட்டில் நடந்த இரட்டைக் கொலைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொடியேரி பாலகிருஷ்ணன், இந்தக் குற்றங்கள் நன்கு திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளன, மாநிலத்தில் நிலவும் அமைதியைக் குலைக்க வகுப்புவாத சக்திகள் முயற்சிக்கின்றன. மதவாத சக்திகள் அரசியல் லாபத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேண்டுமென்றே பிரச்னைகளை தூண்டி வருகின்றனர். அவைகளுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், ““நாட்டில் வளர்ந்து வரும் வகுப்புவாத வைரஸைக் கட்டுப்படுத்த வகுப்புவாத அமைப்புகளைத் தடை செய்வது ஒரு தீர்வாகாது, அப்படியானால், முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்திருக்க வேண்டும். காந்திஜியின் கொலையில் இருந்து பாபர் மசூதி இடிப்பு வரை, சுதந்திரத்திற்குப் பிறகு அதிகபட்ச வன்முறை நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.
பாலகிருஷ்ணனின் அறிக்கைகளுக்கு பதிலளித்த பாஜக, சிபிஎம் தலைவரின் சமீபத்திய அறிக்கை “ஜிஹாதி சக்திகளுக்கும் சிபிஎம் கட்சிக்கும் இடையிலான தொடர்பை” அம்பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், “சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக சிபிஐ(எம்) எஸ்டிபிஐ கட்சியை ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியின் ஆதரவுடன் மாநிலத்தில் பிஎப்ஐ வளர்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே” என்று கூறினார்.
இந்த சூழலில் கேரள மாநில கலால் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், சிறுபான்மை வகுப்புவாதத்தை விட பெரும்பான்மை வகுப்புவாதம் ஆபத்தானது என்று கூறியதும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM