கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழக பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியும் வழங்கப்பட்டது.
இதன் பிறகு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையின் கீழ், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட தமிழக
பாஜக
, பல ஆண்டுகளுக்கு பிறகு, 4 இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறி வந்த திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த வெற்றி மூலம் பதிலடி தந்தார் எல்.முருகன்.
எல்.முருகனின் பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. தற்போது அவர், மத்திய இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். தொடர்ந்து, தமிழக பாஜக மூத்தத் தலைவரான இல.கணேசனை, வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து பிரதமர் நரேந்திர மோடி அழகு பார்த்தார்.
அந்த வரிசையில், தமிழக பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா, அண்டை மாநிலமான கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக மூத்தத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரை டெல்லி வரவழைத்து, பாஜக டெல்லி மேலிடம் பேசி உள்ளது. இதில், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளார். முன்னதாக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கேரள மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.