தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, “ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், ஆளுநர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநரின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று காட்டமாகக் கூறினார்.
அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், “ `ஜீரோ ஹவர்’-ஐ பயன்படுத்தி அரசிடம் கேள்வி கேட்கிறபோது, அதற்குரிய பதிலை அவர்கள் பொறுமையாக இருந்து கேட்டு, அதில் உடன்பாடு இல்லையென்றால் வெளிநடப்பு செய்யட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்துக்கு எடுக்கப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டி.ஜி.பி தெளிவான அறிக்கை கொடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில், `ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என்று கூடுதல் டி.ஜி.பி கூறியுள்ளார். மேலும், ஆளுநர் மற்றும் அவர் பாதுகாப்பு வாகனங்கள் கற்களாலோ, கொடிகளாலோ வேறு எந்தப் பொருள்களாலோ பாதிக்கப்படாமல் காவல்துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை, ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, டி.ஜி.பி-க்கு கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
இந்த அரசு, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்திருக்கிறது. ஆளுநர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்கு பொறுப்பிருக்கிறது” என்று கூறினார்.