ஆளுநர் பாதுகாப்பு விவகாரம் | "நான் பகிர்ந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் பார்க்கட்டும்" – அண்ணாமலை கொந்தளிப்பு

சென்னை: “ஆளுநர் விவகாரத்தில் அரசியல் செய்வது தமிழக முதல்வர் ஸ்டாலின்தானே தவிர பாஜக கிடையாது. ஆர்ப்பாட்டம் நடத்துவதாக 3 நாட்களாக சொன்னபோது அமைதியாக அதனை ஆதரித்தது திமுக. தற்போது என் மீதும் பாஜக மீதும் குற்றம் சுமத்தி, நாங்கள் அரசியல் செய்வதாக கூறுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நான் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய ட்விட்டர் பதிவில் காலை 10.30 மணியளவில் வீடியோ பதிவிட்டுள்ளேன். அந்த வீடியோவை பார்த்துவிட்டது தமிழக முதல்வர், ஆளுநருக்கு எதிராக நடக்கவில்லை என்று கூறட்டும்… நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த வீடியோ Unedited footage, எடிட் செய்யப்படாத ஒரு வீடியோ.

குறிப்பாக ஆளுநரின் கான்வாய் மீது எவ்வளவு கொடிக்கம்பங்கள் வீசப்பட்டன, எப்படியெல்லாம் கொடிக்கம்பங்கள் விழுந்தன என்பதை அதில் காட்டியுள்ளோம். நிறைய கொடிக்கம்பங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கப்பட்டபோது, காவல்துறை சில கொடிக்கம்பங்களை கைகளில் பிடித்துள்ளனர். நிறைய கொடிக்கம்பங்கள் ஆளுநரின் கான்வாய் மீது விழுந்துள்ளன, நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்.

ஆளுநரின் கான்வாய் எப்படிச் சென்றது, அந்தக் காரை கொஞ்சம் விட்டிருந்தால், கால்வாய்க்குள் சென்றிருக்கும். அதாவது, போராட்டம் செய்கிறவர்களுக்கு சாலையின் ஓரத்திலேயே இடம்கொடுத்த போலீஸாரை இப்போதுதான் நான் பார்க்கிறேன். இந்தியாவின் சரித்திரத்தில், ஓர் ஆளுநர் செல்லும்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடம் கொடுப்போம் ஜனநாயகத்தில். ஆனால் சாலையின் ஓரத்தில் கொடுத்து ஆளுநர் கான்வாய் வரும்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைக்குள் வந்து ஆளுநரின் கான்வாய் எத்தனை ஓரத்தில் சென்றது என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், இன்று கண்ணீர் சிந்தக்கூடிய முதல்வர், 3 நாட்களாக பாஜக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் பிரச்சினை குறித்து பேசும்பொழுது எங்கு சென்றார். குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், கொலைகாரர், தமிழக ஆளுநர் கொலைகாரர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். யாரையாவது கைது செய்து சிறையில் அடைத்துள்ளீர்களா, மத்திய அரசின் திட்டங்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களை கொண்டு வந்து அங்கு நிறுத்தியிருக்கிறீர்கள். அதே கும்பல் எதிர்க்கக்கூடிய அதே கும்பல் வேறு வேறு பெயரை வைத்துக்கொண்டு அங்குவந்து நின்றுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேசத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் மீது 124-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள், காவல்துறை டிஜிபிக்கு 124-வது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. இதில் முதல்வர் என்ன பெருமைப்பட்டுக் கொள்கிறார் என்றால், நல்லவேளை ஆளுநருக்கு எதுவும் ஆகவில்லை என்று. இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது, ஐயோ நல்ல வேளை ஆளுநர் மீது கீறல் விழவில்லையென்று.

தமிழகத்தின் சரித்திரத்தில் இப்போதும், எப்போதும் ஆளுநரின் கான்வாய் மீது ஒரு சின்ன தூசி கூட விழுந்தது கிடையாது. அப்படிப்பட்ட காவல்துறையும், தலைவர்களும் நம்மிடம் இருந்தனர். சித்தாந்தத்தையும், தினமும் மக்களுக்கு செய்யக்கூடிய பணிகளையும் பிரித்துப் பார்க்கக்கூடிய தலைவர்கள் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்திருக்கின்றனர்.

எங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், சித்தாந்த அடிப்படையில் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, இந்த மாதிரியான விவகாரத்தில் அவர் சமரசம் செய்துகொண்டதே கிடையாது. முதல்வர் உண்மையாகவே அரசு இயந்திரத்தை இயக்குகிறாரா அல்லது வேறு யாராவது இயக்குகின்றனரா, என்னுடைய வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன், அதை முதல்வர் பார்க்கட்டும், கான்வாய் மீது எவ்வளவு கொடிக்கம்பங்கள் விழுந்தன என்று அவரே எண்ணட்டும், குறிப்பாக கான்வாய் பாதையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச்சென்றது என்பதை பார்த்துவிட்டு பேச வேண்டும். இதில் அரசியல் செய்வது தமிழக முதல்வர் தானே தவிர பாஜக கிடையாது. ஆர்ப்பாட்டம் நடத்துவதாக 3 நாட்களாக சொன்னபோது அமைதியாக அதனை ஆதரித்தது திமுக. தற்போது என்னையும் பாஜகவையும் குற்றம்சுமத்தி நாங்கள் அரசியல் செய்வதாக கூறுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

அந்த வீடியோ பதிவு:



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.