டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி அவருக்கு நன்றி கூறினார். பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பெரும் விவாத பொருளாக மாறி இருக்கக்கூடிய சூழலில், பிரதமர் நரேந்திர மோடியே இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை பற்றி முன்னுரை எழுதியதற்காக நன்றி தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. புளு கிராஸ் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் சார்பில், அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் மற்றும் செயல் வீரர்களின் நடவடிக்கையும் என்ற நூலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் முன்னுரை ஒன்றை எழுதினார். அதில், மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட, திட்டங்கள் வாயிலாக பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று கூறியிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் எதிர்ப்பு கிளப்பியபோதும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னை பற்றி முன்னுரை எழுதியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். பிரதமர் மோடி அம்பேத்கர் சிந்தனை குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இச்சூழலில் பிரதமர் மோடி இளையராஜாவை பாராட்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.