இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர் லெட்டரில் உள்ள ஒரு ஒப்பந்தப் பிரிவை நீக்கக் கோரி புனேவைச் சேர்ந்த தொழிலாளர் சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் தங்கள் நிறுவனத்துக்கு போட்டியாக எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையை தனது ஆஃபர் லெட்டர் எனப்படும் ஊழியர் ஒப்பந்த கடிதங்களில் குறிப்பிடுவது வழக்கம் இது போட்டியற்ற ஒப்பந்தப் பிரிவு என்று கூறப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேறிய பின்பு கடைசி 12 மாதங்களில் தாங்கள் வேலை பார்த்த இன்போசிஸ் வாடிக்கையாளர் தொடர்பான வேலையை வேறு நிறுவனங்களுடன் தொடரக்கூடாது.
மேலும், அந்த வாடிக்கையாளரிடமிருந்து ஆறு மாதங்களுக்கு நேரடியாக எந்த ஒரு வேலை வாய்ப்பையும் ஏற்கக் கூடாது என்றும் அந்த சரத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து குறிப்பிட்ட போட்டி நிறுவனங்கள் என்று சில நிறுவனங்களைக் குறிப்பிட்டு அந்த நிறுவனங்களின் வேலைவாய்ப்பை ஏற்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட போட்டி நிறுவனங்கள் என்று கூறியிருக்கும் சரத்து தற்போது சர்ச்சையாகி இருக்கிறது, இதுகுறித்து நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஊழியர் செனட் என்ற தொழிலாளர் சங்கம் “இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இன் பிரிவு 27ன் கீழ், ஊழியர்களுக்கான இந்தக் கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது” என்று மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகாரளித்துள்ளது.
இன்ஃபோசிஸ் தனது ஐடி சேவை ஊழியர் ஒப்பந்தங்களில் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., ஐ.பி.எம்., அஸெஞ்சர் மற்றும் விப்ரோ ஆகிய ஐந்து நிறுவனங்களையும், வணிக செயல்முறை மேலாண்மை (BPM) ஊழியர்களின் ஒப்பந்தங்களில் டெக் மஹிந்திரா, ஜென்பேக்ட், டபுள்யு.என்.எஸ்., டி.சி.எஸ்., சி.டி.எஸ்., ஐ.பி.எம்., அஸெஞ்சர், விப்ரோ மற்றும் எச்.சி.எல். ஆகிய ஒன்பது நிறுவனங்களையும் ‘பெயரிடப்பட்ட போட்டியாளர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமை அடிப்படையிலான ஊழியர்களுக்கு கடந்த சில காலாண்டுகளாக பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் சுமார் 27.7% ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் போட்டியாளாராக கூறப்படும் டி.சி.எஸ். நிறுவனத்தில் இருந்து 17.4% ஊழியர்களே வெளியேறியுள்ளனர்.