இலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தை அதாவது ஏப்ரல் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இலங்கையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
நாடு முழுவதும் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த தேசிய எதிர்ப்பு தின போராட்டம் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் இலங்கை முழுவதும் முடங்கலாம் எனவும் சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இன்றையதினம் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுவதுடன், பாடசாலைகளுக்கான சேவைகளில் ஈடுபடும் வான் மற்றும் பேருந்துகளும் இன்றைய தினம் தாம் சேவைகளில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி…
எதிர்வரும் 20ஆம் திகதி தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்கள் விசேட அறிவிப்பு
ஒரு வார காலத்திற்கு இலங்கை முடங்கலாம்