மிகமோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விரைவில் கடனுதவி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
ஐஎம்எப் – உலக வங்கி வசந்தகால கூட்டங்களில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ள நிர்மலா சீதாராமன், ஐஎம்எப்பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது இலங்கைக்கு அவசரமாக நிதியுதவி வழங்குமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ஜார்ஜிவா, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் ஐ.எம்.எப் நிர்வாக இயக்குனர் உறுதியளித்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அண்டைநாடான இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.