இஸ்லாமாபாத்: இலங்கையை போன்ற பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தானில் பல மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பெரும் சிக்கலுக்கு அந்நாடு ஆளாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.
பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச நிதியமான கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில நிபந்தனைகளுடன் கடன் வழங்க முன் வந்தன. இருப்பினும் நெருக்கடியை சமாளிக்கும் நிலை பாகிஸ்தான் இல்லை. பாகிஸ்தானிலும் அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நெருக்கடி இப்போது பாகிஸ்தானிலும் காணப்படுகிறது.
அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனது மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளாக வெளிநாட்டிலிருந்து நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்க முடியாத நிலை காணப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக நிலக்கரி மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. ஒருபுறம் விலை உயர்வு மறுபுறம் தட்டுப்பாடு என இரட்டை பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பரவலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பல மாகாணங்களில் மக்கள் பல மணிநேரங்களுக்கு மின்தடையை எதிர்கொள்கின்றனர். கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் நாள்தோறும் 18 மணிநேரம் வரையிலும் கூட மின்வெட்டு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் மின்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் தனது பொருளாதாரத்தை வாழ வைக்க பாகிஸ்தான் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், வெளிநாட்டு சந்தைகளில் இருந்து எரிபொருளை வாங்குவது கடினமாக உள்ளது.
பெட்ரோல் மற்றும் எரிபொருள் விநியோகம் இல்லாததால், பாகிஸ்தானின் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏராளமான ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மொத்தத்தில், இது நாட்டில் 7,000 மெகாவாட் மின்சாரம் தினந்தோறும் இழந்து வருகிறோம்.
பாகிஸ்தானின் மின் உற்பத்தி திறன் சுமார் 35,000 மெகாவாட் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால் 7,000 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போதைய விநியோகத்தைக் கையாள முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரமலான் நோன்பு காலத்தில் இருளில் பிரார்த்தனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் மக்கள் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மின் துறையை தவறாக நிர்வகித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இது முதல் பெரிய சவாலாகும். தள்ளாடும் பொருளாதாரத்துடன் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலையும் பாகிஸ்தானை புதிய நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் எரிபொருளின் விலை மேலும் உயர்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இதனால் நெருக்கடி உடனடியாக முடிந்துவிடும் சூழல் இல்லை.
நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு போன்ற எரிபொருளை வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வாங்குவதற்கு பணவசதி இல்லாமல் இருப்பதால் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.