கொழும்பு :
அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒருவாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. அதேபோல், பல இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில், இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.