சென்னை: பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. அவர்களின் விருப்பங்களை அறிந்து வழிகாட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட புதியகுழு மாநிலம் முழுவதும் உள்ள 37,557 அரசுப் பள்ளிகளிலும் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தையும், ‘நம் பள்ளிநம் பெருமை’ எனும் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளியில் அமைந்துள்ள ஸ்மார்ட்வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின்பேசியதாவது:
மகிழ்ச்சியான காலம்
பள்ளிப் பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான காலம். இத்தகைய மனநிறைவு, கொண்டாட்டம் வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாரும் அதை பிரிக்கவும், திருடவும் முடியாத சொத்தாகும். அதனால்தான் பள்ளிக்கல்விக்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவரின் சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால்தான், கல்வி எனும் நீரோடை மிக சீராக செல்லமுடியும். புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் கூறியதுபோல, குழந்தைகள் என்னவாக வேண்டும் என விரும்புகிறார்களோ அதற்கு பெற்றோர் தடை போடாமல் வழிகாட்ட வேண்டும். உங்கள் கனவுகளை ஒருபோதும் அவர்கள் மீது திணிக்க கூடாது.
இதுதவிர ‘புத்தகங்களே, குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்’ என்று கவிக்கோ அப்துல் ரகுமான்எழுதியுள்ளார். இதை மனதில்வைத்து அனைவரும் மாணவர்களை வளர்த்தெடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் கல்வி என்பதுஒரு சமூகத்தின் எதிர்காலத்துக்கான அடித்தளம். அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்துக்கான திறவுகோல். பள்ளிகளில் தரமானகல்வி வழங்குவதிலும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.36,895 கோடி ஒதுக்கியுள்ளது.
ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்த பள்ளியின் தேவைகள்என்ன என்று அறிந்து அவற்றைவழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வி கிடைக்க பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) நடவடிக்கை வேண்டும்.
ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்
குழந்தைகளின் கற்றல் அறிவை மேம்படுத்துதல், சுற்றுபுறச்சூழலை தூய்மையாக்குதல், இடை நிற்றலை தவிர்த்தல், வளாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளில் புதிய எஸ்எம்சி குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்.
இதுதவிர அனைத்துவகை வன்முறைகளில் இருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் அனைவருடன் அன்பாக பழகும் சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, லேடி வெலிங்டன் பள்ளியின் எஸ்எம்சி குழுவின் தலைவராக தேர்வாகியுள்ள லதாஎன்பவருக்கு அதற்கான சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், புதிதாக தேர்வாகியுள்ள எஸ்எம்சி உறுப்பினர்களுக்கான உறுதிமொழியை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாசிக்க, உறுப்பினர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.