நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் நகராட்சிச் சந்தை நிர்மாணிக்கப்பட்டது. சந்தை அருகிலேயே சந்தைக்கடை மாரியம்மன் ஆலயத்தை நிர்மாணித்து வணிகர்கள் வழிபட்டு வந்தனர். ஒரே பீடத்தில் காளியம்மன் மற்றும் மாரியம்மன் இருவரும் மூலவர்களாக வீற்றிருக்கும் ஆலயமாக விளங்கி வருகிறது. இது மட்டுமல்லாது, காளியம்மன் உக்கிரமின்றி சாந்தமாக வீற்றிருக்கும் அதிசய ஆலயமாக இந்த ஆலயம் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சந்தைக்கடை மாரியம்மன் கோயில் திருவிழா ஒரு மாத காலம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர் திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாகத் துவங்கியது. கடந்த மாதம் 18 – ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி, நாள் தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பக்தர்களின் உபயமாக தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய விழாவான பெரிய தேர் பவனி இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் வடம் பிடித்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து பல ஆயிரம் பக்தர்கள் சூழ ‘ஓம்சக்தி,பராசக்தி’ கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். தேர் பவனியின் போது நேர்த்திக்கடனாக டன் கணக்கான உப்பைத் தேர் மீது வாரி இறைத்துக் காணிக்கை செலுத்தினர்.உப்பு மழையில் அம்மன் தேர் பவனி நடைபெற்றது.
அம்மனுக்கு உப்புக் காணிக்கை செலுத்துவதால் கிடைக்கும் பலன்கள் குறித்துப் பகிரும் ஊட்டி பக்தர் ஒருவர்,
“நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமவெளிப் பகுதிகளில் இருந்து வணிகம் செய்ய வந்த மக்களின் காவல் தெய்வமாக இருந்த சந்தைக்கடை மாரியம்மன், இன்றைக்கு அனைத்து தரப்பு பக்தர்களாலும் போற்றி வணங்கப்படும் அம்மனாக உள்ளார். வெண்ணிறப்பட்டு மட்டுமே உடுத்திவரும் அம்மன் மீது உப்பை வாரி இறைத்தால் மலை போல இருக்கும் கஷ்டங்கள் யாவும் நீரில் கலந்த உப்பைப்போல கரைந்துவிடும் என்பது ஐதிகம். குறிப்பாகா மன பாரத்தைப் போக்கும் மகா மகிமை இந்தத் தேர் பவனிக்கு உண்டு. குடும்பச் சிக்கல்கள், கடன் சுமை போன்ற பல பாரங்கள் கரையும். இந்த நாளுக்காக ஏங்கிக் காத்திருக்கும் பக்தர்கள் ஏராளம். சந்தைக்கடை அம்மனின் உப்புக் காணிக்கை மகிமை உணர்நதவர்கள் யாரும் இந்த நாளைத் தவற விட மாட்டார்கள்” என்றார் பக்தி பெருமிதத்துடன்.