மும்பை,
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்றது. 25-வது நாளான இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு பிளேசிஸ் களமிறங்கினர். அனுஜ் ராவத் 4 ரன்களில் சமீரா பந்துவீச்சில் வெளியேற அடுத்த பந்திலே விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் தீபக் ஹூடா-விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் டூ பிளேசிஸ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து சிறிது அதிரடி காட்டினார். அவரும் வெகு நேரம் நீடிக்கவில்லை. 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவர் வெளியேற்றினார்.
அவரை தொடர்ந்து பிரபுதேசாய் களமிறங்கினார். அவர் குருனால் பாண்டியா பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார். இதனால் பெங்களூரு அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது.
இருப்பினும் ஒரு முனையில் கேப்டன் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய டு பிளேசிஸ் 96 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் வெளியேறினார்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகியது.
தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 3 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து வந்த மனிஷ் பாண்டே 6 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் வெளியேறினார்.
கேப்டன் ராகுல் 30 ரன்களில் நடையை கட்ட குருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 163 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.