புதுடெல்லி:
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை நடைபெற்ற டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணியை வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த மாநகராட்சி தற்போது பாஜக வசம் உள்ளது. அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை நிகழ்ந்த ஓரிரு தினங்களிலேயே முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, இது ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.
இது இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பீடுகளை தகர்க்கும் செயல் என்றும் விமர்சித்தார். சிறுபான்மையினர் தொடர்பாக தங்கள் இதயங்களில் உள்ள வெறுப்புணர்வை பாஜகவினர் புல்டோசர்கள் கொண்டு அகற்ற வேண்டும் என்றும் ராகுல்காந்தி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் ஒருபகுதியாகவே ஜஹாங்கிர்புரி பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, காங்கிரசை விட பெரிய வகுப்புவாத கட்சி இந்தியாவிலேயே இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கும், முஸ்லீம் லீக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.