கால்சியம் முதல் உயிர்ச்சத்து வரை… நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கம்பு சாம்பார் சாதம்!

Sambar Sadam Recipe in tamil: தானிய வகைகளில் கம்புக்கு என்று தனி இடம் உண்டு. இவற்றில் தயார் செய்யப்படும் கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அடை போன்ற உணவுகள் உடலுக்கு நல்ல வலுவை தருகின்றன. மேலும், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. 

நாம் அன்றாட உண்ணும் அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே கம்பு தானியத்தில் அதிகமாக உள்ளது. 

கம்பு குறைந்த கிலோகிளைசெமிக் தன்மை கொண்டது என்பதால், இவை நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த பயனளிக்கும். அவர்கள் இவற்றை தினசரி எடுத்துகொள்ளலாம். 

நார்ச்சத்தும் நிறைந்த காம்பு தானியம் அரிசியைப் போல் இல்லாமல் உமி நீக்கிய பிறகும் நல்ல சத்துகள் கொண்டவையாக உள்ளது. 

கம்பில் உள்ள அமைகோஸ் அமைலொபெக்டின் நெல் அரிசியை காட்டிலும் மாறுபட்டது. இது செரிமானத்தை தாமதமாக்குகிறது. அதனால் ரத்தத்தில் கலக்கும் போது அது மெள்ள மெள்ள கலக்குவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவாக இருக்கிறது.

இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள இந்த கம்பு தானியத்தில் எப்படி சத்தான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். 

கம்பு சாம்பார் சாதம் தயார் செய்யத் தேவையான பொருட்கள் :

கம்பு – ஒரு கப்

துவரம்பருப்பு – அரை கப்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு தேவையான அளவு

தாளிக்க…

கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

கம்பு சாம்பார் சாதம் சிம்பிள் செய்முறை:

கம்பு சாம்பார் சாதம் தயார் செய்ய முதலில் புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 

பிறகு குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு கீழே இறக்கவும்.

தொடர்ந்து வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும்.

பின்னர் அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறவும். இப்போது அவற்றை கீழே இறக்கி பரிமாறவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.