கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆயுஷ் மருந்துகள் உதவியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி பிறந்த பூமிக்கு வந்ததைப் பெரும்பேறாகத் தான் கருதுவதாக உலக நலவாழ்வு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கீப்ரயீசஸ் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவங்களை உள்ளடக்கியது ஆயுஷ் என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் காந்திநகரில் உலக ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க மாநாட்டைப் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆயுஷ் துறையில் முதலீட்டு மாநாடு நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும், கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கப் பாரம்பரிய மருந்துகள் உதவியதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டில் ஆயுஷ் துறையில் 14 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
பாரம்பரிய மருந்துக்கென ஒரு சிறப்பு வணிகக் குறியீட்டை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டவருக்குச் சிறப்பு ஆயுஷ் விசா வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய உலக நலவாழ்வு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கீப்ரயீசஸ், மகாத்மா காந்தி பிறந்த பூமிக்குத் தான் வந்தது தனக்குக் கிடைத்த பெரும்பேறு எனக் குஜராத்தி மொழியில் தெரிவித்தார்.
விழாவில் பேசிய மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், இந்தியா உலகின் மருந்தகமாகத் திகழ்வதாகக் கூறியதுடன், கொரோனா காலத்தில் ஆயுர்வேத மருந்துகளை அனுப்பி உதவியதற்கு நன்றியும் தெரிவித்தார்.