குஜராத்தில் ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். இன்று டாஹோத்தில் நடைபெற்ற ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொண்ட பிரதமர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
நர்மதா ஆற்றுப்படுகையில் சுமார் ரூ.840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள டாஹோத் மாவட்ட தென் பகுதி மண்டல குடிநீர் விநியோகத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், “டாஹோத் மற்றும் பஞ்சமஹால் மாவட்டங்களுக்கான ரூ.22 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, குடிநீர் தொடர்பான திட்டம். மற்றொன்று, டாஹோத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது தொடர்பான திட்டம். தாஹோத் இப்போது மேக் இன் இந்தியாவுக்கான பெரிய மையமாக மாறப்போகிறது” என்றார்.
முன்னதாக, குஜராத் மாநிலம் காந்திநகர் மகாத்மா மந்திரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார்.
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர், “பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் வலுசேர்த்ததை உணர்ந்து, இந்த உச்சி மாநாடு குறித்த சிந்தனை எனக்கு வந்தது. ஆயுஷ் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பும், தேவையும் அதிகரித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பை குறைக்க நவீன மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வமும், அக்கறையும் பாராட்டுக்குரியது” என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM