சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘குற்றம் குற்றமே’. ஜெய், பாரதிராஜா, திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி, தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
’ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ போன்ற வித்தியாசமான கதைகளைத் தயாரித்துப் பெயர்பெற்ற ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கிறது.
2005 மார்ச்-9. ஒரு பள்ளி மாணவி ஆற்றில் விழுந்து இறந்து விடுகிறாள். சில வருடங்களுக்குப் பின்பு (2021 மார்ச்-9) ஒரு பள்ளி மாணவி வீட்டருகிலேயே விபத்துக்குள்ளாகி இறந்துவிடுகிறாள். இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் (2020 மார்ச்-29) வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜெய்யின் மனைவி கோகிலா (திவ்யா துரைசாமி) மர்மமாக இறந்துக் கிடக்கிறார். இது, தற்கொலையா கொலையா என்று போலீஸ் விசாரணையின் போது முன்பும் பின்பும் இறந்த மாணவிகளின் மரணத்துக்கான காரணங்களையும் திவ்யா துரைசாமியின் மரணத்துக்கான காரணத்தையும் விவரிக்கிறது திரைக்கதை.
‘ஜெய்’ தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தைக் குறையில்லாமல் நடித்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால், சுசீந்திரனிடம் ஜெய் கதை கேட்டாரா என்பதுதான் சந்தேகம். சமூக வலைதளங்களில் ஃபோட்டோஷூட் மூலம் பிரபலமானவர் திவ்யா துரைசாமி. ஆனால், திரைத்துறைஅயில் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாமே அவரை முடக்கிப் போடுவது போல்தான் அமைகிறது. குற்றம் குற்றமேவும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஓய்வுபெற்ற டி.எஸ்.பியாக வந்து விசாரணை செய்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. அவ்வளவு முக்கியமான வழக்கா அது என்பதற்கு திரைக்கதையில் எந்த காரணமும் இல்லை. இப்போது விசாரணையை செல்ஃபோனிலேயே வீடியோ எடுக்கும் அளவுக்கு டெக்னாலஜி வந்துவிட்ட காலக்கட்டத்தில், பழையக்கால ரெக்கார்டரை எடுத்துவந்து வாக்குமூலங்களை பதிவு செய்கிறார்.
இதையெல்லாம் விட கொடுமை… பாரதிராஜாவைத்தான் பெண்கள் வன்கொடுமை புகாரில் மகளிர் போலீஸார் கைது செய்ய வேண்டியிருக்கும் போல. திவ்யா துரைசாமியின் மரணத்துக்கு பின்னால் மற்றொரு கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் இருப்பதாக சந்தேகப்படுகிறார்கள். அப்போது, இளம்பெண் ஸ்மிருதி வெங்கட்டை கேஷுவலாக விசாரணை செய்வதாக நினைத்து அவரது தோள் மீது கையைப்போட்டுக்கொண்டு நடந்தபடி விசாரிக்கிறார் பாரதிராஜா.
Unnatural Death எனப்படும் எந்த ஒரு இயற்கைக்கு மாறான மரணத்தையும் போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் போலீஸ் கொடுக்கவே கொடுக்காது. கொடுக்கவும் கூடாது. அப்படி கொடுத்தால் அந்த மரணத்துக்கு காரணமானவர்களைவிட போலீஸார்தான் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று சட்டம் சொல்கிறது. அப்படியிருக்க, மனைவி (திவ்யா துரைசாமி) தற்கொலை செய்துகொண்டார் என்று கணவர்(ஜெய்) மற்றும் அவரது குடும்பத்தாரே வாக்குமூலம் கொடுக்கிறார்கள். “டி.எஸ்.பிக்கிட்ட பேசிட்டதால போஸ்ட் மார்ட்டம் பண்ணல. பிணத்தை எடுத்துக்கோங்க” என்று படத்தில் போலீஸ் கொடுத்து அனுப்புவதுபோல் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். ஒரு க்ரைம் த்ரில்லர் சினிமா எடுக்கும்போது போலீஸ், டாக்டர் என சம்பந்தப்பட்டவர்களிடம் கொஞ்சம் கேட்டிருந்தாலே இவ்வளவு பெரிய லாஜிக் மீறல்கள் இருக்காதல்லவா? இப்படி படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள், லாஜிக் மீறல்கள் என நம்மை வதைக்கிறது திரைக்கதை.
மேடை நாடகம் போல் இருக்கின்றன பலக்காட்சிகள். ஒவ்வொரு காட்சியிலும் மேக் அப் கலையாத சீரியல் ஆர்டிஸ்ட்கள்போல் உலாவிக்கொண்டிருக்கின்றன கதாப்பாத்திரங்கள்.
சின்னத்திரையில் மூச்சுவிடாமல் நகைச்சுவையில் கலக்கி, மதுரை முத்து சேர்த்து வைத்திருந்த ஒட்டுமொத்த பெயரையும் இப்படத்தின் மூலம் கெடுத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது, ஸ்டேண்ட் அப் காமெடிகளை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால், இந்த படத்தில் காமெடியாக நினைத்துக்கொண்டு அவர் பேசும் வசனங்களை யாருமே ரசித்தவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம்.
‘ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஃபினிஷிங் சரியில்லையே’ என்கிற அளவுக்கு, டைட்டில் கார்டு போடும்போது கொடுக்கப்படும் பில்டப்புகள் எல்லாமே வெத்து பில்டப்பாக மட்டுமே நகர்கின்றன.
குற்றம் செய்தவர்களுக்கு குற்றவுணர்வு கொடுக்கும் தண்டனையைவிட வேறு எதுவும் தண்டனை இல்லை என்று சொல்ல முயல்வது போல தெரிகிறது. ஆனால், சொன்ன விதம்தான் பார்வையாளர்களை சுட்டெரித்துவிட்டது. அதுவும், பெற்றோர்கள் செய்த குற்றங்களுக்குக் குழந்தைகளை பலிவாங்குவது என்ன நியாயம்?.
நாயகியின் மரணத்தை மையப்படுத்தியதுதான் கதை. அக்காட்சிகளில் எவ்வளவு உருக்கமாக பின்னணி இசை கொடுக்கவேண்டும்? ஆனால், நாயகியின் பிணத்துக்கு மஞ்சள் பூசும் காட்சிகளில் ‘ஒளியிலே தெரிவது தேவதையா?’ என்கிற மஞ்சள் நீராட்டு விழா காட்சிபோல் குதூகலமான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜேஷ்.
இயக்குநர் சுசீந்தரனுக்கு என்னாச்சு? நீங்கதான் சமீபத்திய படங்களை இயக்குறீங்களா? இல்ல… அதிகப் படங்கள் புக் ஆவதால், உங்களது பெயரில் (பிராண்டில்) ஃப்ரான்சைஸ் நிறுவிக்கொண்டு வேறு ஆட்கள் இயக்குகிறார்களா என பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.
‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ இந்த நான்குப் படங்களுமே தமிழ் சினிமாவின் முக்கியமான படங்கள். உங்களை திரையுல மாவீரனாய் உயர்த்திக் காட்டியது கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மாவீரன் கிட்டு’. ஆனால், அதன்பிறகு உங்கள் இயக்கத்தில் வெளியான ’ஜீனியஸ்’, ‘கென்னடி கிளப்’, ‘சாம்பியன்’, ’ஈஸ்வரன்’, ’வீரபாண்டியபுரம்’, படங்கள் ஏன் வெற்றிபெறவில்லை என்று ஆராய்ந்திருந்தாலே ‘குற்றம் குற்றமே’ படம் இப்படி வந்திருக்காது.
எல்லா இயக்குநர்களிடமும் தரமான படங்களை எதிர்பார்த்துவிட முடியாது. அபார கலைத்திறமையுள்ள சுசீந்திரனிடம்தானே தரமான, நேர்த்தியான படங்களை எதிர்பார்க்க முடியும்? இனியாவது, சரியான அணி அமைத்து உங்களது தரமான ஆட்டத்தை ஆரம்பியுங்கள். கைத்தட்டி விசிலடிக்க காத்துக்கொண்டிருக்கிறோம். இனியும் எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றிவிடாதீர்கள் ப்ளீஸ்.
-வினி சர்பனா